பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2022-02-19 12:44 GMT
மயிலாடுதுறை:-

மயிலாடுதுறையில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

நடைபயிற்சி

மயிலாடுதுறை- திருவாரூர் சாலை பட்டமங்கல புதுத்தெருவை சேர்ந்தவர் அறிவாளி (வயது66). இவருடைய மனைவி திலகவதி (56). இவர்கள் இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் பட்டமங்கலம் புதுத்தெருவில் இருந்து ஸ்ரீநகர் வரை நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளனர். 
பட்டமங்கல புதுத்தெருவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திலகவதியும், அவருடைய கணவர் அறிவாளியும் கூச்சலிட்டு உள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் தப்பினார்

கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக அறிவாளி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மர்ம நபர் பறித்துச்சென்ற தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்