டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதுபாட்டில்கள் சேதம்

செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ரூ.25 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன.

Update: 2022-02-19 12:23 GMT
சென்னை,

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலத்தின் கீழே டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த கடையில் தீப்பிடித்து எரிந்தது. தீயின் வெப்பத்தால் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்கள் வெடித்து சிதறின.

இதனால் கடை முழுவதும் தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், கடையின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் அடைந்தன. பழைய கட்டிடம் என்பதால் மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் மது குடிக்க வழியில்லையே என்ற ஆத்திரத்தில் மர்மநபர்கள் கடைக்கு தீ வைத்தார்களா? என பல்வேறு கோணத்தில் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடையில் பாதுகாப்புக்காக 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. தீ விபத்தில் அவைகளும் கருகியதால், தீ விபத்துக்கான காரணம் குறித்து அறியவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்