வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், உபகரணங்கள் எடுத்துச்செல்லும் பணி; கலெக்டர், தேர்தல் பார்வையாளர் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் எடுத்துச்செல்லும் பணியை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-02-18 23:30 GMT
ஈரோடு
வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் எடுத்துச்செல்லும் பணியை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளுக்கு அமைக்கப்பட்டு உள்ள 1,251 வாக்குச்சாவடிகளில், போட்டியின்றி தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகள் தவிர்த்து 1,219 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் கட்ட பயிற்சி வகுப்பில் 4 ஆயிரத்து 530 அலுவலர்களும், 2-ம் கட்ட பயிற்சி வகுப்பில் 4 ஆயிரத்து 395 அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 4 மண்டலங்களில் உள்ள 59 வார்டுகளுக்கும் வாக்குப்பதிவுக்கு தேவையான எழுது பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் எடுத்துச்செல்லும் பணியையும், அங்கு செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தையும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
மேலும் அவர்கள், நகர்ப்புற தேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ள 1,251 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1,251 வாக்குப்பதிவு கருவிகள் ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் இருந்து 40 வாகனங்கள் மூலம் எடுத்துச்செல்லும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர். இதேபோல் 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளுக்கும், சம்பந்தப்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பெட்டி இருப்பறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்