பவானி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து; பெண் உடல் கருகி சாவு
பவானி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உடல் கருகி பலியானார்.
பவானி
பவானி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உடல் கருகி பலியானார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சமையல் செய்வதற்காக...
ஜம்பை பேரூராட்சிக்கு உள்பட்ட சின்ன வடமலைபாளையத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவருடைய மனைவி சீரங்காயி. இவர்களுடைய மகள் அய்யம்மாள் (வயது 35). இவர்கள் அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். இதில் அய்யம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
அய்யம்மாளின் கணவர் தங்கமணி. இவர்களுடைய மகன் அஜய்ராஜ் (13). அய்யம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு அவருடைய பெற்றோர் வீட்டில் இருந்ததால் கணவர் தங்கமணியும், மகன் அஜய்ராஜும் மயிலம்பாடியில் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் சமையல் செய்வதற்காக வீட்டில் உள்ள அடுப்பை சீரங்காயி பற்ற வைத்து உள்ளார்.
சாவு
பின்னர் அருகில் உள்ள தன்னுடைய மகன் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது அடுப்பில் இருந்து தீ பரவி குடிசை வீட்டில் உள்ள ஓலையில் பிடித்தது. இதில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வீட்டின் ஒரு பகுதியில் படுத்திருந்த அய்யம்மாள் இந்த தீ விபத்தில் சிக்கி கொண்டார். அவரால் வீட்டில் இருந்து வெளியே ஓடி வரமுடியவில்லை. இதில் உடல் கருகி அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனது.
இதுபற்றி அறிந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.