ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி நேற்று நடந்தது.

Update: 2022-02-18 23:13 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி நேற்று நடந்தது.
1,219 வாக்குச்சாவடிகள்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 443 வாக்குச்சாவடிகள், 4 நகராட்சியில் 153 வாக்குச்சாவடிகள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,251 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 21 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாலும், 2 வேட்பாளர்கள் இறந்து விட்டதாலும் வாக்குச்சாவடி எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 1,219 வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக 6 ஆயிரத்து 5 தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியில் ஈடுபடும் 4 ஆயிரத்து 530 பேருக்கு கடந்த மாதம் 31-ந்தேதி முதற்கட்ட பயிற்சியும், கடந்த 10-ந்தேதி 4 ஆயிரத்து 395 பேருக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அதன்படி ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கல்லூரி, கொங்கு மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
4,876 அலுவலர்கள்
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஓட்டுப்பதிவு முதன்மை அதிகாரி உட்பட 3 அல்லது 4 அலுவலர்களும், 1,000 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில், 10 சதவீதம் பேர் அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் காத்திருப்பில் இருப்பார்கள். நேற்று பயிற்சி நிறைவு பெற்றதும், மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி ஒதுக்கீடு பெறப்பட்ட 4 ஆயிரத்து 876 அலுவலர்களுக்கு, பணி ஆணை வழங்கினர். அங்கிருந்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான உதவி தேர்தல் அலுவலரின் ஆலோசனைப்படி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுடன் அவர்களும் வாக்குச்சாவடிக்கு சென்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் 51-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமியும், பேரூராட்சியில் 20 பேரும் போட்டியின்றி தேர்வானார்கள். இவர்களுக்கான, 30 வாக்குச்சாவடிகள் திரும்ப பெறப்பட்டன. மேலும் அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன், அம்மாபேட்டை பேரூராட்சியில் 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சித்துரெட்டி ஆகியோர் இறந்ததால், இந்த வார்டுக்கான வாக்குச்சாவடியும் முடக்கப்பட்டன. அங்கு பணி செய்யும் அலுவலர்கள், அதே பேரூராட்சியில் பிற பூத்களுக்கு கூடுதல் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்