பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Update: 2022-02-18 20:42 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை)  15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
வாக்குப்பதிவு 
15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 363 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற அறிவிக்கப்பட்ட நிலையில் 3 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தநிலையில் ஒரு வார்டில் போட்டியிட்ட தி.மு.க. உறுப்பினர் மரணம் அடைந்த நிலையில் 359 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது,
 இதற்காக 761 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 103 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 658 வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு போலீஸ்காரர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார். பதற்றமான 103 வாக்குச்சாவடிகளில் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் 9 வாகனங்களில் 100 அதிரடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் அதிகாரிகள், போலீசார் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 
எழுத்துப்பூர்வம்  
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பு தினமான இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், பொதுத்தேர்தலை போல நோட்டா வசதி இல்லை. ஆனாலும் வாக்காளர்கள், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் அவர் வாக்குச் சாவடி அதிகாரியிடம் அதுகுறித்து எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 9 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன்முடிவடையும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகிறது.
துப்பாக்கி ஏந்திய போலீசார் 
 வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி நடைபெறும். அதுவரையிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணைய பார்வையாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலசுந்தர், மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்
வத்திராயிருப்பு 
 வத்திராயிருப்பு தாலுகாவில் 4 பேரூராட்சிகளில்  வாக்குப்பதிவு எந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
சாத்தூரில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாத்தூர் நகராட்சியில் வாக்குப்பெட்டி அமைக்கப்பட்டு இருந்தது.  தேர்தல் பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் தங்களது வாக்கினை தபால் வாக்குகளாக தேர்தல் நடத்தும் அலுவலர் நித்தியா முன்னிலையில் நேற்று பதிவு செய்தனர். மேலும் தேர்தல் பணிக்காக செல்லும் போலீசார் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு அளித்தனர். 
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டையில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக அனுப்பும் பணி நடைபெற்றது. 
வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்