வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

சேலம் மாநகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2022-02-18 20:20 GMT
சேலம்:-
சேலம் மாநகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
சேலம் மாநகராட்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளருக்கான சின்னங்கள் பொருத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த அறை நேற்று காலை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் திறக்கப்பட்டு அங்கிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் அவைகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
மருத்துவ உபகரணங்கள்
மேலும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகான 13 வகையான மருத்துவ உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் போன்ற வாக்குப்பதிவிற்கான அனைத்து பொருட்களும் மண்டல அலுவலர்கள், மண்டலங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறும் போது, சேலம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இன்று (நேற்று) 3-ம் கட்ட பயிற்சி அளித்து அவர்களுக்கு பணி ஆணைகளும் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் மூலமும், வெப் கேமரா மூலமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
அப்போது மாநகராட்சி என்ஜினீயர் ரவி, உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் மண்டல அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்