ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

தஞ்சை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது என்று கூறிய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-02-18 19:44 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது என்று கூறிய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை மாநகராட்சி மற்றும் வல்லம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மே்றகொள்ளப்பட்டுள்ள ஆயத்த பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம் மாநகராட்சி, அதிராம்பட்டினம் நகராட்சி, பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் 20 பேரூராட்சிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சாதாரண தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 750 வாக்குச்சாவடி மையங்களில் வல்லம் பேரூராட்சி தூய சவேரியார் நடுநிலைப்பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் நவபாரத் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் ஆயத்த பணிகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தயார் நிலை
அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளதோடு வாக்குச்சாவடி மையங்களில் முறையான கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அனைத்தும் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. காலை 7 மணிமுதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்க உள்ளதால் ஆயத்தப் பணிகள் அனைத்தும் முழுமையடைந்து வாக்குப்பதிவினை சந்திக்க தஞ்சை மாவட்டம் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் மணிகண்டன், வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்