மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி
கும்பகோணத்தில் 139 வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் 139 வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. கும்பகோணம் மாநகராட்சி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று நடைபெறும் தேர்தலை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 139 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
கும்பகோணம் மாநகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரேமா, சொரூபராணி மற்றும் அதிகாரிகள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு
இன்று வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.