தயார் நிலையில் 750 வாக்குச்சாவடிகள்
தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு 750 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு 750 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
உள்ளாட்சி தேர்தல்
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய 2 மாநகராட்சிகளுக்கும், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும், 20 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் 81 ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள், 81 பெண்களுக்கான வாக்குச்சாவடிகள், 34 பொது வாக்குச்சாவடிகள் என 196 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி
அங்கு வேட்பாளர்கள் முன்னிலையில் பெயர், சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தப்பட்டன. இந்தநிலையில் பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நேற்றுபிற்பகல் தொடங்கியது.
மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்றது. மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளை 15 மண்டலங்களாக பிரித்து 15 வேன்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார்.
அலுவலர்கள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருட்கள் வேனில் ஏற்றப்பட்டவுடன் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேன்களில் ஏறி அமர்ந்தனர். பின்னர் ஒவ்வொரு வேன்கள் மூலமாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்பட்டன.
அங்கு வேன்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இறங்கி வைக்கப்பட்டன. இதையடுத்து மேஜைகளை அலுவலர்கள் எடுத்து போட்டு, அவற்றில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து அதை சுற்றி அட்டைகளால் மறைவுகளை ஏற்படுத்தினர்.
கும்பகோணம் மாநகராட்சி
இதேபோல் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தும், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய நகராட்சி அலுவலகங்களில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அந்தந்த வார்டுகளுக்கு எடுத்து செல்லப்பட்டன.
ஆடுதுறை, அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதூர், வல்லம், வேப்பத்தூர் ஆகிய 20 பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் முன்னிலையில் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.
தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வேன்களில் ஏற்றப்பட்டு அந்தந்த பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 750 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 905 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் அமைக்கப்பட்டதுடன், சக்கர நாற்காலியும் வைக்கப்பட்டுள்ளது.