குரங்கணி மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் எந்த இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர்?-மதுரை ஐகோர்ட்டு ேகள்வி

தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலியான விவகாரத்தில், குரங்கணி மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் எந்த இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர்? என்று மதுைர ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2022-02-18 19:18 GMT
மதுரை, 

தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலியான விவகாரத்தில், குரங்கணி மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் எந்த இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர்? என்று மதுைர ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. 

23 பேர் பலி

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சென்னையில் டிரெக்கிங் கிளப் நடத்தி வருகிறேன். கொழுக்குமலை மற்றும் தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள முறையான அனுமதி பெற்று, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 27 பேருடன் மலைக்கு சென்றோம்.
ஆனால், குரங்கணியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த 4 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 
மலையேற்றத்துக்காக சென்ற 27 பேரும் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் காட்டுக்குள் நுழைந்ததாக வனத்துறையினர் கூறி வருகின்றனர். இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு கேள்விகளை ஐகோர்ட்டு எழுப்பி இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் டிரெக்கிங் கிளப் மூலமாகவே மலையேற்றத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கும் இந்த விபத்தில் தொடர்பு உள்ளது. அந்த வகையில் அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதாடினார்.

எந்த இணையதளம் வழியாக? 

அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மீதும் வழக்குபதிவு செய்தது ஏற்கத்தக்கதல்ல. சம்பந்தப்பட்ட அனைவரும் வனத்துறையினரிடம், முறையான கட்டணம் செலுத்தி ரசீது பெற்ற பின்னரே மலையேற்றத்திற்கு சென்றுள்ளனர். எனவே மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மலையேற்றத்திற்கு சென்றவர்கள் எந்த இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர் என்று கேள்வி எழுப்பி, அதுசம்பந்தமான விவரங்களை உறுதி செய்யும்படி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை மார்ச் மாதம் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்