‘அ.தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க.வினர் மிரட்டுகிறார்கள்’-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார்

சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க.வினர் மிரட்டுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-02-18 18:25 GMT
சோழவந்தான்,

சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க.வினர் மிரட்டுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் தி.மு.க.வில் இணைந்தார்

 தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. சோழவந்தான் பேரூராட்சியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள 18 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜனதா, சுயேச்ைச வேட்பாளர்கள் என 80 போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 15-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஜனகராஜ் சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இந்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் அலுவலரிடம் புகார்

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. சோழவந்தான் பேரூராட்சி தேர்தல் அலுவலரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சோழவந்தானில் நடைபெறக்கூடிய தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும். ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும். ஆளும் கட்சியினரால் மற்ற கட்சிகளுக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதனால் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
நாங்களும் கடந்த 10 ஆண்டு ஆட்சி ஆளும் பொழுது எத்தனையோ தேர்தல் நடந்திருக்கிறது. எந்த தேர்தலிலும் மாற்றுக்கட்சிக்கு, எதிர்க் கட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தேர்தல் நடைபெறவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தினோம். நடைபெறக்கூடிய பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. அமைச்சர் உள்பட தி.மு.க.வினர் அ.தி.மு.க. வேட்பாளர்களையும் மற்றும் கட்சி நிர்வாகிகளையும் மிரட்டுகிறார்கள். தேர்தல் அலுவலர்கள் தாங்கள் நியாயமாக, நேர்மையாக, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அ.தி.மு.க. அத்தனை வேட்பாளர்களையும் வாபஸ் பெறுவோம்.ஏன் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடவும் தயங்கமாட்டோம். 
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார். 

போலீசில் புகார்

இதேபோல் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவபாலனிடம் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி புகார் மனு கொடுத்தார். இதில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், நகரச் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் முருகேசன் உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்