வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த கம்யூனிஸ்டு கட்சி பெண் வேட்பாளர்

கொல்லங்கோட்டில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் வேட்பாளர் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கினார்.

Update: 2022-02-18 18:20 GMT
கொல்லங்கோடு, 
கொல்லங்கோட்டில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் வேட்பாளர் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கினார்.
பெண் வேட்பாளர்
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன்  முடிவுக்கு வந்தது. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கிறிஸ்டல் பாய் அவரது வார்டில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.  
பணம் பறிமுதல்
இதனை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் 16-வது வார்டில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட கவர்களில் பணம் வைத்து வழங்கியதாக தெரிகிறது. 
இதனை கண்ட அதிகாரிகள் அந்த பெண் வேட்பாளரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.2,510 ரொக்கம் மற்றும் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட கவர்கள் மற்றும் நோட்டீஸ்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பெண் வேட்பாளரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
வழக்குப்பதிவு
பறிமுதல் செய்த பணம் மற்றும் நோட்டீஸ்களை அதிகாரிகள் நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பெண் வேட்பாளர் கிறிஸ்டல் பாய் மற்றும் அவருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்சிறை வட்டார செயலாளர் சுகந்தர கிருஷ்ணன், மெர்லின் லின்டோ, மாதீன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்