குமரியில் 1,236 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு

குமரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 975 வார்டுகளில் 4,366 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதற்காக 1,236 வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் ஓட்டுப்போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-18 18:16 GMT
நாகர்கோவில், 
குமரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 975 வார்டுகளில் 4,366 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதற்காக 1,236 வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் ஓட்டுப்போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பிரசாரம் ஓய்ந்தது
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. 
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 56 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் தேர்தல் களத்தில் அனல் பறந்தது. நேற்று முன்தினம் மாலையில் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது.
நாகர்கோவில் மாநகராட்சி
நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி கடந்த 2019-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்ந்த பிறகு முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. 
மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இவற்றில் 356 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
நகராட்சிகள்-பேரூராட்சிகள்
குளச்சல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. அவற்றில் 78 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கொல்லங்கோடு நகராட்சியில் 32 வார்டுகளில் 165 பேரும், குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளில் 83 பேரும், பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகளில் 111 பேரும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 4 நகராட்சிகளில் 437 பேர் களத்தில் உள்ளனர்.
தேர்தல் நடைபெற உள்ள 51 பேரூராட்சிகளில் 828 வார்டுகள் உள்ளன. இவற்றில் 4 வார்டுகளில் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் 824 வார்டுகளில் 3,573 பேர் போட்டியிடுகிறார்கள். மொத்தத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 975 கவுன்சிலர் பதவிகளுக்கு 4,366 பேர் களத்தில் உள்ளனர்.
1,236 வாக்குச்சாவடிகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 399 வாக்காளர்களும், கொல்லங்கோடு நகராட்சியில் 51 ஆயிரத்து 593 வாக்காளர்களும், குளச்சல் நகராட்சியில் 23 ஆயிரத்து 223 வாக்காளர்களும், குழித்துறை நகராட்சியில் 18 ஆயிரத்து 376 வாக்காளர்களும், பத்மநாபபுரம் நகராட்சியில் 17 ஆயிரத்து 253 வாக்காளர்களும், 51 பேரூராட்சிகளில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 780 வாக்காளர்களும் என மொத்தம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 லட்சத்து 41 ஆயிரத்து 624 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
இதற்காக நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் 233 வாக்குச்சாவடிகளும், கொல்லங்கோடு நகராட்சியில் 63 வாக்குச்சாவடிகளும், குளச்சல் நகராட்சியில் 34 வாக்குச்சாவடிகளும், குழித்துறை நகராட்சியில் 22 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வாக்குச்சாவடிகளும், 51 பேரூராட்சிகளில் 863 வாக்குச்சாவடிகளுமாக மொத்தம் 1,236 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தேர்தல் பணியில்                                  10 ஆயிரம் பேர்
இன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடி பணிகளில் மட்டும் 6 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். இதுதவிர 100 மண்டல குழுக்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒரு குழுவுக்கு 4 பேர் வீதம் 400 பேர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்காக மட்டும் 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையே வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான 3-ம் கட்ட பயிற்சி நேற்று காலை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி இந்துக்கல்லூரியில் நடந்தது. இதில் 1,100 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் அந்தந்த நகராட்சி அலுவலக பகுதிகளிலும், அந்தந்த பேரூராட்சி அலுவலக பகுதிகளிலும் 3-ம் கட்ட பயிற்சி நடந்தது. மொத்தம் 6 ஆயிரம் பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
பயிற்சி முடிந்ததும் அவர்கள் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக பயிற்சி நடந்த பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தபால் வாக்குகளை செலுத்த வசதியாக தபால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் வாக்குச்சாவடி அதிகாரிகள், பணியாளர்கள் தங்களது தபால் வாக்கு அடங்கிய உறையை அதில் போட்டுச் சென்றனர். நாகர்கோவில் இந்து கல்லூரியிலும் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் ஏராளமானோர் தபால் வாக்குகளை போட்டு விட்டு தேர்தல் பணிக்கு புறப்பட்டு சென்றனர். முதல் நாளே அவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதால் தங்களுக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பேக்குகளை எடுத்துச் சென்றனர்.
இதை தொடர்ந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அழியாத மை, எழுதுபொருட்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட வாக்குச்சாவடியில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் மூலமாக நேற்று மதியத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில் நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் மினி வேன்கள் பயன்படுத்தப்பட்டன.
காலை 7 மணி முதல்                   வாக்களிக்கலாம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் வாக்குச்சாவடிகளை சென்றடைந்ததும் அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தயார் நிலையில் வைத்தனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதன் பிறகு முறையாக வாக்குப்பதிவு தொடங்கும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக மாற்ற வசதியாக ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கும் 10 சதவீதம் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்