கழிவுநீர் ஓடை தேவை
குலசேகரபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு தெருவில் கழிவுநீர் ஓடை முறையாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வீடுகளில் இருந்து கழிவுநீர் ஓடைக்கு செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் ஓடையில் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுடலையாண்டி பிள்ளை, குலசேகரபுரம்.
தடுப்புகள் தேவை
நாககோவில் கணேசபுரத்தில் இருந்து கோட்டார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கோட்டாரில் இருந்து கணேசபுரத்துக்கும், கணேசபுரத்தில் இருந்து கோட்டார் செல்லும் வாகனங்களும் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி திருப்பத்தில் வரும்போது விபத்தில் சிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த திருப்பத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து இருவழியாக வாகனங்கள் பிரிந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பி.நாதன், வடிவீஸ்வரம்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் இரண்டாக பிரிந்து ஒருவழியாக நாகர்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்களும், மறுபுறம் மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் எதிர் திசையில் இருச்சக்கர வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்கின்றனர். இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, விபத்துகளை தடுக்க எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சேம்ராஜ், சாரதாநகர், பார்வதிபுரம்.
தரமாக அமைக்க வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பழைய சாலைகளை கிளறி விட்டு அதன்மீது புதிய தார்சாலை போடப்படுவதால், சாலையின் மட்டம் உயர்ந்தும், குடியிருப்புகளின் மட்டம் தாழ்ந்தும் காணப்படுகிறது. இதனால், மழைகாலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழைய சாலைகளை முழுவதுமாக அகற்றி விட்டு தரமான புதிய சாலைகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின், நாகர்கோவில்.
வாகன ஓட்டிகள் அவதி
கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் இருந்து கோட்டார் சவேரியார் சந்திப்புக்கு செல்லும் சாலையில் கவிமணி பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே செல்லும் தெருவின் முகப்பில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், டி.வி.டி.காலனி, கோட்டார்.
சுரங்கபாதை தேவை
நாகர்கோவில் வடசேரியில் அண்ணாசிலை சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதி மாநகரத்தில் முக்கிய பகுதியாகும். வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்துதான் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும், சந்தைகள், பஸ்நிலையமும் உள்ளன. ஆனால், இந்த பகுதியில் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல சுரங்க பாதை எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதசாரிகள் நலன் கருதி சுரங்க பாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ஜி.சிவராஜ் கிருஷ்ணன், வடசேரி.