சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய 500 கிலோ எடையுள்ள ராட்சத மீன்
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் வலையில் 500 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கியது. அதை கிரேன் மூலம் தூக்கி லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
கன்னியாகுமரி,
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் வலையில் 500 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கியது. அதை கிரேன் மூலம் தூக்கி லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
விசைப்படகு மீனவர்கள்
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஏராளமான கட்டுமரங்களும் மீன்பிடித்து வருகின்றன.
விசைப்படகு மீனவர்கள் கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக பல தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் 4 நாட்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்க கலெக்டர் அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கியிருந்த மீன்பிடிக்க சென்றனர்.
500 கிலோ ராட்சத மீன்
இந்தநிலையில் கடலுக்கு சென்று தங்கி மீன்பிடித்த சில விசைப்படகுகள் நேற்று முன்தினம் கரை திரும்பின. அவற்றில் ஒரு விசைப்படகில் இருந்த கன்னியாகுமரி மீனவர்கள் வலையில் 500 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கி இருந்தது.
அந்த மீனை விசைப்படகில் இருந்து கிரேன் மூலம் தூக்கி துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர், அதை வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம் எடுத்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து திரும்புவதையொட்டி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களைக்கட்ட தொடங்கியுள்ளது.