வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கரூர்
வாக்குப்பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகள், அரவக்குறிச்சி, புலியூர், கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், புஞ்சை தோட்டக்குறிச்சி, உப்பிடமங்கலம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 246 வார்டுகளில் 938 பேர் களத்தில் உள்ளனர். 5 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள 241 வார்டுகளுக்கு இன்று(சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கரூர் மாநகராட்சியில் 87 ஆயிரத்து 508 ஆண் வாக்காளர்களும், 96 ஆயிரத்து 471 பெண் வாக்காளர்களும், 20 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர்.
இதேபோல் குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகளில் 38 ஆயிரத்து 513 ஆண் வாக்காளர்களும், 42 ஆயிரத்து 11 பெண் வாக்காளர்களும், 3 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 80 ஆயிரத்து 527 வாக்காளர்கள் உள்ளனர். புஞ்சை தோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், மருதூர், நங்கவரம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், அரவக்குறிச்சி ஆகிய 8 பேரூராட்சிகளில் 35 ஆயிரத்து 787 ஆண் வாக்காளர்களும், 38 ஆயிரத்து 892 பெண் வாக்காளர்களும், 2 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 74 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 808 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 77 ஆயிரத்து 374 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 3 லட்சத்து 39 ஆயிரத்து 207 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மையங்கள்
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 406 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வார்டுகள் தவிர்த்து மீதமுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கரூர் மாநகராட்சியில் 187 வாக்குப்பதிவு மையங்களும், குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகளில் 91 வாக்குப்பதிவு மையங்களும், அரவக்குறிச்சி, புலியூர், கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், புஞ்சை தோட்டக்குறிச்சி, உப்பிடமங்கலம் ஆகிய 8 பேரூராட்சிகளில் 120 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 398 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 1,960 அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ளனர். கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக 92 வாக்குச்சாவடிகள் (கரூர் மாநகராட்சியில் 31 வாக்குச்சாவடிகள், 3 நகராட்சிகளில் 41 வாக்குச்சாவடிகள், 8 பேரூராட்சிகளில் 20 வாக்குச்சாடிகள்) கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணித்திட சிசிடிவி மற்றும் வெப் ஸ்டீமிங் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள்...
வாக்குச்சாவடிகளில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவினை அறியும் வகையில் சாலையில் பெயிண்ட் மூலம் கோடு போடப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் லாரி, வேன்களில் மூலம் அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்குப்பதிவிற்கான பணிகள் நடைபெற்றன. வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களில் இடைவெளி விட்டு வட்டம் போடப்பட்டிருந்தது. மேலும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.