நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஏற்பாடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
கரூர்
கலெக்டர் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த உள்ள பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டு பணிகளை கரூர் மாநகராட்சி அலுவலத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022-க்கான வாக்குப்பதிவு நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த உள்ள பொருட்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகின்றது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளிலும் மொத்தம் 398 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கொரோனா தொற்று தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட 85 வகையான பொருட்கள் போலீசாரின் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
அமைதியான முறையில்...
அதனடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட கணினிமுறை குலுக்கல் முடிவடைந்து, மூன்றாவது பயிற்சி வகுப்புகள் முடிவடைந்த பின்னர் அவர்கள் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மாலைக்குள் அனைத்து பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வது உறுதிசெய்யப்படும்.
நாளை (இன்று) அமைதியான முறையில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி பொறியாளர் நக்கீரன், கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.