கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 9 எம்எல்ஏக்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 9 எம்எல்ஏக்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்

Update: 2022-02-18 17:40 GMT


கோவை 

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

தர்ணா போராட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகிய 9 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் நேற்று காலை 10.15 மணிக்கு  கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயசந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
கோவையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது. பிரசாரம் நிறைவடைந்ததும் வெளியூர்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஆனால் இதுவரை கோவையில் தங்கியிருக்கும் கரூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளியேறாமல் உள்ளனர். 

ஆளுங்கட்சிக்கு போலீஸ் துணை

கோவை போலீசார் ஆளுங்கட்சிக்கு துணை போகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் வாக்காளர்களுக்கு சில இடங்களில் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது சென்னையில் வன்முறை ஏற்பட்டது. அதுபோன்ற சூழல் கோவையில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே துணை ராணுவத்தை வரவழைத்து வாக்குப்பதிவு நடத்த வேண்டும். பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் நடைபெறுவதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால் புகார் அளிக்கும் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது.

தர்ணா போராட்டம்

தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தலே நடத்தாமல் தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவித்து விடுங்கள். கோவையில் தங்கியிருக்கும் வெளியூர்காரர்கள், ரவுடிகளை உடனடியாக வெளி யேற்ற வேண்டும். அதுவரை நாங்கள் தர்ணா போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், கோவை தேர்தல் பிரசாத்தின் போது உதயநிதி ஸ்டாலின், வேலுமணிக்கு சாவுமணி அடிப்பேன் என்று பேசியுள்ளார். 

அவரது அராஜக செயலை கண்டிக்கிறோம். கோவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெளியூர்காரர்கள் தங்கி உள்ளனர். ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகள், தேர்தல் பணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றார்.
பேச்சுவார்த்தை
அவர்களிடம் கலெக்டர் சமீரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார். ஆனாலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைந்து செல்ல மறுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் பல முறை பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது


நேற்று காலை 10.15 மணிக்கு தொடங்கிய தர்ணா போராட்டம் மதியம் 2.30 மணி வரை நீடித்தது. எனவே அவர்களை கைது செய்ய உதவி ஆணையாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்குள் போலீஸ் வேன் கொண்டு வரப்பட்டது. 


பின்னர் போலீசார் அ.தி.மு.க.வினரை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் என 30 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்