செல்போன் டவர் அமைக்க இடம் கேட்டு வாலிபரிடம் மோசடி
கடலாடி அருகே சிக்கல் பகுதியை சேர்ந்தவரிடம் செல்போன் டவர் அமைக்க இடம் கேட்டு மோசடி செய்தவர் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்,
கடலாடி அருகே சிக்கல் பகுதியை சேர்ந்தவரிடம் செல்போன் டவர் அமைக்க இடம் கேட்டு மோசடி செய்தவர் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறுஞ்செய்தி
கடலாடி அருகே உள்ள கீழசிக்கல் பகுதியை சேர்ந்த சேகர் மகன் நவீன்குமார் (வயது28). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதன் மீது ஆர்வம் கொண்ட நவீன்குமார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அதில் பேசிய நபர் தான் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதா கவும் தங்களிடம் இடம் இருந்தால் பிரபல செல்போன் நிறுவனத்திற்காக செல்போன் டவர் அமைக்க இடம் தருமாறும் அதற்கு முன்பணமாக ரூ.40 லட்சமும், மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் வாடகையும் தருவதாக தெரிவித்துள்ளார்.
பயனில்லாமல் கிடக்கும் நிலத்திற்கு மாதந்தோறும் வாடகை கிடைத்தால் நல்லது என்று நினைத்து ஆசை கொண்ட நவீன்குமார் அவர்கள் கேட்டபடி நிலத்திற்கான ஆவண விவரங்களை அனுப்பியதோடு அவர்கள் கேட்டபடி கூகுள்பே மூலமாக ரூ.1 லட்சத்து 42ஆயிரத்து 949 பணம் அனுப்பி உள்ளார்.
வழக்குப்பதிவு
இந்த பணத்தினை பெற்றுக்கொண்ட நபர் அதற்கான ரசீது அனுப்பியதால் அதனை உண்மை என்று நம்பி நவீன்குமார் காத்திருந்தார். தொடர்ந்து பணம் கேட்பதிலேயே குறியாக இருந்ததால் நவீன்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த சமயத்தில் செல்போன் டவர் அமைக்க இடம்கேட்டு பணம் பறிக்கும் கும்பல் பற்றி தகவல் பரவியதால் சுதாரித்து கொண்ட நவீன்குமார் மேற்கொண்டு பணம் அனுப்பாமல் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.