தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தங்களை வழங்கியதில் விதிமீறல் புகார் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

ஒப்பந்தங்களை வழங்குவதில் விதிமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-18 17:12 GMT
தர்மபுரி:
ஒப்பந்தங்களை வழங்குவதில் விதிமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தவர் ஆனந்தன். இவர் தற்போது கள்ளக்குறிச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 
இதேபோல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக மதலைமுத்து பணிபுரிந்து உள்ளார். இவர் தற்போது தர்மபுரி தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 
புகார்கள்
இவர்கள் 2 பேரும் பாப்பிரெட்டிப்பட்டியில் பணிபுரிந்தபோது உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் விதிகளை மீறி செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஊராட்சி ஒன்றிய பகுதியில் அமைப்பதற்குரிய எல்.இ.டி. விளக்குகள் கொள்முதலில் விதிகளை மீறியதாக புகார்கள் எழுந்தன.
இதேபோல, 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தவர் ஜெயராமன். இவர் தற்போது ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் பணிபுரிந்தபோது ஏற்கனவே அங்கு பணியாற்றிய ஆனந்தன், மதலைமுத்து ஆகிய 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் விதி மீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு தொகையை விடுவித்ததாகவும் கூறப்படுகிறது. 
ஒப்பந்தங்களை வழங்குவதில், விதிகளை சரியாக பின்பற்றாமல் செயல்பட்டதாக இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் 3 போலீஸ் குழுவினர் தர்மபுரியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மதலைமுத்து வீடு, ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள ஜெயராமன் வீடு, அரூரில் உள்ள ஆனந்தன் வீடு ஆகிய 3 வீடுகளில் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினார்கள்.
துருவி துருவி விசாரணை
இந்த சோதனை நேற்று மாலை வரை தொடர்ந்து நடந்தது. அப்போது வீட்டில் இருந்த 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் குடும்பத்தினரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். வீடுகளில் இருந்த பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. 
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 பேர் மீது வழக்கு
தர்மபுரி மாவட்டத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் நேற்று மாலை வரை நடந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், மதலைமுத்து, ஜெயராமன் மற்றும் இவர்களுக்கு பொருட்களை வினியோகித்த கடை உரிமையாளர்கள் மதிவாணன், குமார் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்