கிருஷ்ணகிரி நகராட்சியில் இன்று வாக்குப்பதிவு 12 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள்

கிருஷ்ணகிரியில் நகராட்சி தேர்தலையொட்டி 12 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Update: 2022-02-18 17:11 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நகராட்சி தேர்தலையொட்டி 12 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகள் 
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்காக தேர்தல் இன்று  நடக்கிறது. இதில், 56 ஆயிரத்து 433 பேர் வாக்களிக்க உள்ளனர். மொத்தம், 170 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகராட்சியில் மொத்தம் உள்ள 66 வாக்குச்சாவடிகளில், 8 இடங்களில் 12 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஏற்கனவே நகராட்சி சார்பில் வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 
தீவிர கண்காணிப்பு
இந்த நிலையில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் உத்தரவின் பேரில், நகரில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள சாலையில் 16 இடங்களில் தற்காலிகமாக 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
இதன் மூலம் நேற்று மதியம் முதல் இன்று இரவு வரை ஓட்டுச்சாவடி மையம் அமைந்துள்ள சாலைகளை இந்த கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்