ராயக்கோட்டை அருகே காய்கறி வாகனம் மோதி விவசாயி பலி
ராயக்கோட்டை அருகே காய்கறி வாகனம் மோதி விவசாயி பலியானார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 45). விவசாயி. இவர் நேற்று மதியம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க ராயக்கோட்டைக்கு வந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லிங்கனம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது ராயக்கோட்டையில் இருந்து ஓசூரை நோக்கி காய்கறி ஏற்றி வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் மோதியது.
இதில் படுகாயமடைந்த முனிராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.