கல்வராயன்மலையில் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
கல்வராயன்மலையில் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் விரக்தி அடைந்த பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
கச்சிராயப்பாளையம்
மாணவி
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலை கருநெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் சின்னசேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரி அவரது வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவரது தந்தை பழனிச்சாமி படிக்காமல் ஏன் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த புவனேஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரது வாயில் இருந்து நுரை தள்ளியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.