பள்ளிபாளையம் அருகே சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது போலீசார் விசாரணை
பள்ளிபாளையம் அருகே சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது போலீசார் விசாரணை
பள்ளிபாளையம், பிப்.19-
குமாரபாளையத்தில் இருந்து வெப்படைக்கு நேற்று மதியம் அட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை குமாரபாளையத்தை சேர்ந்த சண்முகவேல் (வயது 61) என்பவர் ஓட்டி சென்றார். சரக்கு வேன் பள்ளிபாளையம் அருகே உள்ள அழகாபாளையம் பெருமாள் கோவில் காடு பகுதியில் சென்றபோது வாகனத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சண்முகவேல் சரக்கு வேனை சாலையோரமாக நிறுத்தி விட்டு உடனடியாக இறங்கி விட்டார்.
பின்னர் இதுகுறித்து வெப்படை மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அதிகாரி சிவகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் சரக்கு வேனில் இருந்த அட்டைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.