மனைவி-2 மகள்களை கொன்று டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
கீழ்வேளூர் அருகே கிரைண்டர் குழவி கல்லை தலையில் போட்டு மனைவி-2 மகள்களை கொன்று விட்டு டீக்கடைக்காரர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மூத்த மகள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.;
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே கிரைண்டர் குழவி கல்லை தலையில் போட்டு மனைவி-2 மகள்களை கொன்று விட்டு டீக்கடைக்காரர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மூத்த மகள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.
டீக்கடைக்காரர்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகம் புதுச்சேரி கிராமம் கடைத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 55). இவர் தனது வீட்டு வாசல் முன்பு டீ மற்றும் டிபன் கடை நடத்தி வந்தார்.
இவர் தனது மனைவி புவனேஸ்வரி(45) மகள்கள் தனலட்சுமி(22), வினோதினி(19), அட்சயா(17) ஆகியோருடன் குடும்பத்தோடு வசித்து வந்தார். வினோதினி நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். மற்றொரு மகள் அட்சயா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
வேறு சமூகத்தவருடன் திருமணம்
லட்சுமணனின் மூத்த மகள் தனலட்சுமி, நாகையில் உள்ள தனியார் முழு உடல் பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தனலட்சுமி, புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து அவரோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.
தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் லட்சுமணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தனது மகளின் செயலை மிகுந்த அவமானமாக கருதிய லட்சுமணன், கடந்த 10 நாட்களாக டீக்கடையை திறக்காமல் வெளியே வேலை பார்த்து வந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்
நேற்று காலை 7 மணியாகியும் லட்சுமணன் வீட்டில் உள்ளவர்கள் வாசல் கதவை திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் லட்சுமணன் வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர். கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு கண்ட காட்சியால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். வீட்டுக்குள் புவனேஸ்வரி, வினோதினி, அட்சயா ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். லட்சுமணன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் போலீசார், சம்பவம் நடந்த வீட்டுக்குள் சென்று பார்வையிட்டனர்.
மனைவி-மகள்களை கொன்று தூக்குப்போட்டு தற்கொலை
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரின் தலையில் கிரைண்டர் குழவிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்திற்கு நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து நின்று விட்டது. தடயவியல் நிபுணர்களும் வீட்டிற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் விசாரணை
அதனைத்தொடர்ந்து இறந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொன்று விட்டு டீக்கடைக்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.