காட்டுமன்னார்கோவில் அருகே 2 குழந்தைகளை கழுத்தை நெரித்துக்கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
காட்டுமன்னார்கோவில் அருகே 2 குழந்தைகளை கழுத்தை நெரித்துக்கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கடலூர்,
காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் காலனி பெரியதெருவை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி சசிகலா (வயது 30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3½ வயதில் வரோகா, 3 மாத குழந்தை விஜயஸ்ரீ ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் 2-வது குழந்தை பிறந்தது முதல் சசிகலா எது சாப்பிட்டாலும், வயிற்றில் செரிமானம் ஆகாமல் வாந்தி எடுத்து வந்தார். இதையடுத்து சசிகலாவை அவரது பெற்றோர் திருச்சி, மயிலாடுதுறையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கொலை
இருப்பினும் அவருக்கு நோய் குணமடையவில்லை. இதனால் சசிகலா, சாக வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் தான் இறந்த பிறகு குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்களே என்று நினைத்த அவர், முதலில் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 23.4.2018 அன்று மதியம் 12 மணி அளவில் சசிகலா தனது மாடி வீட்டில் 2 குழந்தைகளையும் படுக்க வைத்தார். பின்னர் பெரிய குழந்தை வரோகாவை படுக்க வைத்து, தட்டிக்கொண்டே கழுத்தை நெரித்தும், மூக்கை அழுத்தி பிடித்தும் கொலை செய்தார். அதன்பிறகு 3 மாத பெண் குழந்தை விஜயஸ்ரீயையும் அதேபோல் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இரட்டை ஆயுள் தண்டனை
தொடர்ந்து அவர், தானும் உயிரோடு இருக்கக்கூடாது என்று வீட்டின் அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். இது பற்றி அவரது மாமியார் விஜயா காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், கொடூரமான முறையில் 2 குழந்தைகளை கொன்ற சசிகலாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வளர்மதி ஆஜரானார்.