கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்காத தேர்தல் அதிகாரியை கண்டித்து கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 286 பேர் களத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
இந்நிலையில் நேற்று காலை நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமிரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
தர்ணா போராட்டம்
தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் சென்று, வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சியினரை தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு எதற்காக பறக்கும் படையை நியமிக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டபடி இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டம் நடத்திய கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.