கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று (சனிக் கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி 715 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுரைவுகள் வழங்கினார்.
அப்போது, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் வழிவகை செய்ய வேண்டும். வாக்காளர்களிடம் கனிவாக பேச வேண்டும். வாக்காளர்களை வரிசையில் நிற்க வைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் நேர்மையுடனும், எவ்வித பிரச்சினைகளுக்கும் இடம் அளிக்கக்கூடாது என்றார்.
2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 11 உதவி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 55 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் 400 ஊர்க்காவல் படையினர் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
715 வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகளை கொண்டு சேர்க்க 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 57 நடமாடும் குழுவினர், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் வரை பணியில் ஈடுபடுவார்கள்.
அதிரடிப்படை
இது தவிர நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போலீஸ் நிலைய பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.