போலி பில்கள் தயாரித்து ரூ.13 கோடி வரி ஏய்ப்பு 3 ஏலக்காய் வியாபாரிகள் மீது நடவடிக்கை

போடியில் போலி பில்கள் தயாரித்து ரூ.13 கோடி வரி ஏய்ப்பு நடந்து உள்ளது. இது தொடர்பாக 3 ஏலக்காய் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-18 15:31 GMT
போடி:
மதுரை மாவட்ட வணிகவரி நுண்ணறிவு பிரிவினர், தேனி மாவட்டம் போடியில் உள்ள 3 ஏலக்காய் வியாபாரிகளின் கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது வியாபாரிகள் கொடுத்த முகவரி போலி என்பதும், இவர்கள் மூலம் ரூ.261 கோடியே 13 லட்சம் வரை ஏலக்காய் வணிகம் நடைபெற்றதும், சரக்கு மற்றும் சேவை வரிசட்டத்தின் இணைய தளத்தில் போலியான கணக்குகள் காட்டப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 
மேலும் இந்த 3 வியாபாரிகளும் போலி பில்கள் தயாரித்து கொடுத்து‌ ரூ.13 கோடியே 16 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. 
வசூல் 
இதன் அடிப்படையில் 3 வியாபாரிகளின் பதிவு எண்களை ரத்து செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்‌ போது சேகரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு, வரி ஏய்ப்பு செய்த தொகையை வசூல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு வணிக வரித்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவலை‌ சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வணிக வரி ஆணையம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்