கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயில் தாக்கத்தால் மரங்களிலேயே வெடிக்கும் இலவம் காய்கள்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயில் தாக்கத்தால் மரங்களிலேயே இலவம் காய்கள் வெடிக்கின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கரில் இலவம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு அடுத்த மாதம் இலவம்பஞ்சு சீசன் தொடங்க உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக தற்போது இலவ மரங்களில் காய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக இலவம் காய்கள் மரங்களிலேயே காய்ந்து வெடித்து அதிலிருந்து பஞ்சு வெளியேறி வீணாகி வருகிறது.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இலவம் காய்கள் பறிக்கும் பணிகள் நடைபெறும். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம், வெயில் காரணமாக ஒவ்வொரு மரங்களிலும் அறுவடைக்கு முன்பாகவே காய்கள் வெடித்து பஞ்சு வீணாகி வருகிறது. இந்த காய்களை வேலையாட்களை பயன்படுத்தி பறித்தாலும் சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் நஷ்டம் மட்டுமே ஏற்படும். எனவே தற்போது மரங்களில் காய்ந்து வரும் இலவம் காய்களை பறிக்காமல் சீசனுக்காக காத்திருக்கிறோம். வெயில் காரணமாக காய்கள் வெடித்து பஞ்சுகள் வீணாவதால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றனர்.