396 வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல்: தயார் நிலையில் 750 வாக்குச்சாவடிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 396 வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடப்பதை ஒட்டி, வாக்குப்பதிவு செய்வதற்காக 750 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன

Update: 2022-02-18 13:00 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 396 வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு செய்வதற்காக 750 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. 
இன்று உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 81 வார்டுகள், கடம்பூர் தவிர 17 பேரூராட்சிகளில் உள்ள 255 வார்டுகள் ஆக மொத்தம் 396 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த 396 பதவிகளுக்கு மொத்தம் 1,950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 
இந்த தேர்தலில் மொத்தம் 6 லட்சத்து 51 ஆயிரத்து 693 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தூரத்தில் வெள்ளை நிற கோடுகள் வரையப்பட்டு உள்ளன. பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்ட 174 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 211 நுண்பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
3 ஆயிரத்து 600 பணியாளர்கள்
இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 3 ஆயிரத்து 600 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சி முடிவில் பணியாளர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி பணியாளர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பொருட்களை அனுப்பும் பணியை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 48 மண்டல குழுக்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், பணியில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர் வசம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதேபோன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஓட்டுப்பதிவு
இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தொடர்ந்து 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள 89 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. 
கூட்டம் கூடக்கூடாது
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் எந்த வேட்பாளரும் முகாம் அமைக்கக்கூடாது, ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருக்கும் இடத்தில் ஒரு வேட்பாளருக்கு அனைத்து வாக்குச்சாவடிக்கும் பொதுவாக ஒரே ஒரு முகாம் மட்டுமே வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்படலாம். அரசியல் கட்சியினர், வேட்பாளர்களால் வாக்குச்சாவடிக்கு அருகில் அமைக்கப்படும் முகாம்களில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முகாம்களில் தின்பண்டங்கள் வினியோகிக்கவோ அல்லது மக்கள் கூடுவதை அனுமதிக்கவோ கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களிடம் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. வாக்குச்சாவடி அருகே மெகாபோன், ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்