ஆசிரமத்தில் விஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சாவு - சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்
ஊத்துக்கோட்டை அருகே ஆசிரமத்தில் விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகள்கள் மகேஸ்வரி (வயது 24), ஹேமமாலினி (20). இவர்களில் ஹேமமாலினி, திருவள்ளூர் அருகே தொழுவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேஸ்வரிக்கு கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள மெதிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் (30) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் கடந்த 2 ஆண்டுகளாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வந்த நாட்டு வைத்தியர் முனுசாமி (50) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. கல்லூரி மாணவி ஹேமமாலினிக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாததால் அவரும் அங்குள்ள ஆசிரமத்துக்கு வந்து தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மகேஸ்வரி மற்றும் ஹேமமாலினி இருவரும் ஆசிரமத்துக்கு சென்று தங்கினர். அப்போது ஹேமமாலினி திடீரென்று பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தார். உடனடியாக ஹேமமாலினியை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
ஹேமமாலினி தற்கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஹேமமாலினியின் பெற்றோர், பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், தங்களுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியிருந்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இறந்த ஹேமமாலினியின் தந்தை ராமகிருஷ்ணன், தாயார் நிர்மலா மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டரின் கார் வந்தது. இதை பார்த்த அவர்கள் ஓடிச்சென்று கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் காலில் விழுந்து கதறி அழுதனர்.
பின்னர் ஹேமமாலினியின் தாயார் நிர்மலா, தன்னுடைய மகளின் சாவுக்கு காரணமான ஆசிரம சாமியார் முனுசாமி, அவருடைய மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கதறி அழுதார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை சமாதானப்படுத்திய கலெக்டர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.