ராயபுரத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து - கப்பல் பாதுகாப்பு உபகரணங்கள் நாசம்
சென்னை ராயபுரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கப்பல் பாதுகாப்பு உபகரணங்கள் தீயில் கருகி நாசமானது.
சென்னை,
சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் கப்பலில் பயணம் செய்யும்போது அணியப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், காட்டன் துணிகள், பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. 2-வது தளத்தில் ரத்த வங்கி உள்ளது. 3-வது தளத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. அந்த கரும்புகை சிறிது நேரத்துக்குள் தீயாக மாறி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராயபுரம் மற்றும் ஐகோர்ட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் அந்த கட்டிடத்தின் அனைத்து தளங்களையும் கரும்புகை சூழ்ந்து கொண்டது.
இதனால் 3-வது மாடியில் தங்கியிருந்த கட்டிடத்தின் உரிமையாளரின் குடும்பத்தினர் மூதாட்டி, குழந்தைகள் உள்பட 5 பேர் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். புகை மூட்டம் அதிகமானதால், அவர்கள் அனைவரும் மொட்டை மாடிக்கு ஓடி சென்றனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு கீழே அழைத்து வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கட்டிடத்தை சூழ்ந்திருந்த புகையை முற்றிலுமாக அகற்றி, தீயணைப்பு வீரர்கள் அவர்களை பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த கப்பல் பயண பாதுகாப்பு உபகரணங்கள், துணிகள் தீயில் கருகி நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.