வீட்டுமனைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

தாம்பரம் அருகே வீட்டுமனைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-18 10:42 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் பாபு. இவரிடம் தினக்கூலி அடிப்படையில் சுரேஷ் என்பவர் உதவியாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டுமனைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த ஒருவர், பாபுவிடம் மனு கொடுத்தார். அதற்கு சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாபுவுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மனுதாரரிடம் கேட்டார். அதன்படி மனுதாரர் ரூ.18 ஆயிரத்தை சுரேசுக்கு ‘கூகுள் பே’ மூலம் அனுப்பினார்.

மேலும் இதுபற்றி அவர், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று கிராம நிர்வாக அலுவலர் பாபு, அவரது உதவியாளர் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்