வாக்கு எண்ணும் மையத்தில் 52 கண்காணிப்பு கேமராக்கள். கண்காணிப்பு கோபுரமும் அமைப்பு

வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.;

Update:2022-02-18 03:12 IST
வேலூர்

வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும் மையம்

வேலூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், திருவலம், பென்னாத்தூர், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் பதிவாகும் வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. அங்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை நேற்று மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

கண்காணிப்பு கோபுரம்

வாக்கு எண்ணும் அறையில் மரக்கட்டைகள் கொண்டு பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், மேசைகள் அமைக்கப்பட்டுள்ள இடைவெளி குறித்தும் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள் எங்கு பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் பார்வையிட்டனர். 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு வெளியே போலீசார் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அதை பார்த்த தேர்தல் பார்வையாளர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு இடையூறு இல்லாத வகையில் சில மாற்றங்கள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு 200 மீட்டர் தொலைவில் சாலையின் இருபுறமும் ஒலிபெருக்கி வைக்கவேண்டும் என பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறினார். அதையடுத்து அங்கு ஒலிபெருக்கி வைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, தேர்தல் பார்வையாளர் பிரதாப் உத்தரவிட்டார். ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்