அம்மாபேட்டை பேரூராட்சி தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் மரணம்- 2-வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு

அம்மாபேட்டை பேரூராட்சி தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் 2-வது வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2022-02-17 20:50 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பேரூராட்சி தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் 2-வது வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
தி.மு.க. வேட்பாளர்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 13 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் 2-வது வார்டு வேட்பாளராக ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்த அழகேசன் என்கிற சித்துரெட்டி (வயது 62) என்பவர் போட்டியிட்டார். கடந்த ஒரு வாரமாக தன்னுைடய வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். 
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 
மரணம்
உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அந்தியூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு       செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சித்துரெட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்த சித்துரெட்டிக்கு மணி (57) என்ற மனைவியும், ஜெகன் (36) என்ற மகனும், கீர்த்தனா (34) என்ற மகளும் உள்ளனர். 
தேர்தல் ஒத்திவைப்பு
வேட்பாளர் இறந்துவிட்டதால் அவர் போட்டியிட்ட 2-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அத்தாணி பேரூராட்சியின் 3-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பில் திடீரென மரணம் அடைந்தார். நேற்று காலை அம்மாபேட்டையில் தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் இறந்துவிட்டார். அடுத்தடுத்து தி.மு.க. வேட்பாளர்கள் மரணம் அடைந்த சம்பவம் அந்தியூர், அம்மாபேட்டை பகுதியில் தி.மு.க.வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்