வ.உ.சி. 150-வது பிறந்தநாள்: புகைப்பட கண்காட்சி பஸ்சை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்

வ.உ.சி. 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வரலாற்றை விளக்கிக்கூறும் புகைப்பட கண்காட்சி பஸ்சை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Update: 2022-02-17 20:49 GMT
ஈரோடு
வ.உ.சி. 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வரலாற்றை விளக்கிக்கூறும் புகைப்பட கண்காட்சி பஸ்சை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
வ.உ.சி. 150
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் எழுச்சியுடன் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து வ.உ.சி. 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் நகரும் புகைப்பட கண்காட்சி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பஸ்சை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த பஸ் கடந்த 16-ந் தேதி ஈரோடு மாவட்டம் வந்தது. வ.உ.சி.யின் தியாகத்தையும், அவரது தீர வரலாற்றையும் மாணவ- மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள புகைப்படங்கள் இந்த பஸ்சில் வைக்கப்பட்டு உள்ளன.
மாணவ-மாணவிகள் ஆர்வம்
இந்த நகரும் புகைப்பட கண்காட்சியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் பார்வையிடும் வகையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கண்காட்சி பஸ்சை அந்த பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து இந்த பஸ் மின்னப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, முகாசி அனுமன் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களிலும் மாணவ- மாணவிகள் பார்வைக்காக நிறுத்தப்பட்டது.
கவுந்தப்பாடி
நேற்று கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகள் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தொடர்ந்து பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோபி நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் மாணவிகள் பார்வையிட்டனர். வ.உ.சி. குறித்த பல்வேறு தகவல்களையும், நமது முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு போராடி, ரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்று இருக்கிறார்கள் என்பதையும் இந்த கண்காட்சி விளக்கியதாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
இன்று
இன்று (வெள்ளிக்கிழமை) டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பங்களாப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் ஒன்றியத்தில் சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களில் நகரும் புகைப்பட கண்காட்சி நடக்கிறது. மாணவ- மாணவிகளுடன் இந்த பகுதி பொதுமக்களும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பார்வையிடலாம்.
இந்த தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்