திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு- வாகன ஓட்டிகள் கடும் அவதி

திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளார்கள்.

Update: 2022-02-17 20:49 GMT
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளார்கள்.
 திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்கு இது முக்கியமாக பாதையாகும். அதனால் எப்போது இரு மாநில வாகனங்கள் வந்து சென்றபடி இருக்கும். 
திம்பம் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, மான், குரங்கு உள்ளிட்டவை ரோட்டை கடக்கும்போது வாகனங்களில் மோதி உயிரிழப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடும் போக்குவரத்து பாதிப்பு
அதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
 காலை 6 மணிக்கு மேல் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. 
நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் புளிஞ்சூர் சோதனை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டியது 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. 
மாணவ-மாணவிகள் பாதிப்பு
தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பஸ்களில்தான் சென்று வருகிறார்கள். 
ஆனால் கடந்த 11-ந் தேதி முதல் குறித்த நேரத்துக்கு பஸ்கள் வராமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதால் மாணவ-மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று வருகிறார்கள். 
இதேபோல் நாள்தோறும் தாளவாடியில் மலை கிராமங்களில் இருந்து சத்தியமங்கலத்துக்கு காய்கறிகளை வேனில் கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலில் காய்கறி வேன்கள் மாட்டிக்கொள்வதால் சரியான நேரத்துக்கு மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல முடியால் வியாபாரிகளும், விவசாயிகளும் நஷ்டம் அடைகிறார்கள். 
காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
இதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு வாரமாக பல முறை அவசர நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்சுகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருந்தன. 
எனவே தமிழக அரசு உடனே இந்த பிரச்சினையில் தலையிட்டு திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்திலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

மேலும் செய்திகள்