தோலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தோலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-02-17 20:46 GMT
வேப்பந்தட்டை:

தேரோட்டம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறையில் உள்ள தோலீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 9 நாட்கள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பின்னர் கோவில் வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வெள்ளாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.
இதேபோல் வி.களத்தூரில் உள்ள தர்மபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி உலா சென்று பின்னர் கோவிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருந்திருவிழா தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு விதிமுறைகளின்படி எளிய முறையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மூலவர், அம்பாள் மற்றும் உற்சவர், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் உற்சவ சுவாமி புறப்பாடு நடந்தது. பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் உதவி சிவாச்சாரியார் கவுரி சங்கர் ஆகியோர் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்