மாணவர்கள் திடீர் சாலை மறியல்

மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-17 20:46 GMT
ஜெயங்கொண்டம்:

சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் வழங்கப்படுகின்ற மதிய உணவு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல், தட்டுப்பாட்டுடன் உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு உரிய நேரத்திற்கு உணவு வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு உள்ள ஜெயங்கொண்டம் -செந்துறை சாலையில் இலையூர் பஸ் நிறுத்தம் அருகில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முற்றுகை
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சமரசம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, உரிய நேரத்தில் மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டைகளை வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளித்ததன்பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்