முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2022-02-17 20:46 GMT
குன்னம்:

தீர்த்தவாரி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள அபராதரட்சகர் (குற்றம் பொறுத்தவர்) கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 10-ம் நாளான நேற்று மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம்(திதி) கொடுக்கும் நிகழ்ச்சியும் வெள்ளாற்றங்கரையில் நடைபெற்றது. தீர்த்தவாரியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் சு.ஆடுதுறை, ஒகளூர், ஆக்கனூர், கழனிவாசல், அ.பாளையம், அத்தியூர், பழைய அரசமங்கலம், வடக்கலூர், கத்தாழைமேடு, வ.அக்ரகாரம், கீழக்குடிகாடு, பென்னகோணம், கீழுமத்தூர், கொரக்கை ஏந்தல், புதுப்பேட்டை, அகரம் சீகூர் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.
தர்ப்பணம்
பவுர்ணமிகளில் மாசிப் பவுர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. மாசிமக தீர்த்தவாரியன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்போது பித்ரு தோஷம் நீங்கும் புனித நாளாகும் என்று கருதி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
குன்னத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கோமாதா பூஜையும், அதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் முக்கிய வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்