வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிய அனுமதிக்க வேண்டும்
கர்நாடகத்தில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாரர்கள் வக்கீல் கோரிக்கை விடுத்தார்
பெங்களூரு:
ஐகோர்ட்டில் விசாரணை
கர்நாடகத்தில் மாணவிகள் ஹிஜாப்-காவி துண்டு உள்ளிட்டவற்றை அணிந்து வகுப்பில் ஆஜராக கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஐகோர்ட்டு, மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று 5-வது நாளாக தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் வினோத் குல்கர்னி வாதிடுகையில் கூறியதாவது:-
உத்தரவிட வேண்டும்
ஹிஜாப் அணிய அரசு தடை விதித்துள்ளதால் ஏழை முஸ்லிம் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அந்த மாணவிகள் வெள்ளிக்கிழமைகள் மற்றும் புனித ரமலான் மாதத்தில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். ஏனென்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித ஜும்மா நாள் ஆகும்.
ஹிஜாப் விவகாரத்தால் நாட்டில் அதுபற்றி பெரிய அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது.
ஹிஜாப் உடல் நலனுக்கோ அல்லது தார்மீகமாகவோ எதிரானது அல்ல. ஹிஜாப்புக்கு தடை விதிப்பது, புனிதமான குரானுக்கு தடை விதிப்பது போன்றது ஆகும்.
இவ்வாறு வினோத் குல்கர்னி கூறினார்.
பொதுநல மனு தள்ளுபடி
முன்னதாக வக்கீல் வினய் குல்கர்னி, ஹிஜாப் வழக்கு தொடர்பாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு, ஐகோர்டடு விதிமுறைப்படி இல்லாமல் இருந்தது. இதனால் அந்த பொதுநல மனுவை ஐகோர்ட்டு நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.