பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர் கைது
கார்களை வாடகைக்கு எடுத்து பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்
சமயபுரம்
திருவானைக்காவல் ஸ்ரீராம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). இவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள மேலசெமன் மாரி பகுதியை சேர்ந்த உத்தமன் (40) என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கார்களை வாடகைக்கு எடுத்துள்ளார். 2 மாதங்கள் தொடர்ந்து வாடகை கொடுத்து வந்த சக்திவேல் அடுத்தடுத்து வாடகை கொடுக்காததால் ஸ்ரீரங்கம் போலீசில் உத்தமன் புகார் கொடுத்தார்.
இதேபோன்று சமயபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த அழகுசுந்தரம் (32), சமயபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த வசந்த் (40), சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியை சேர்ந்த தர்மராஜ் ஆகியோரிடமும் சக்திவேல் கார்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சமயபுரம் போலீசில் புகார் அளித்தனர்.இதுதொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.