மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக 56 வாகனங்கள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக 56 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-02-17 20:17 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக 56 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற சாதாரண உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் ஆகிய நகராட்சிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
இது தவிர வல்லம், ஒரத்தநாடு, ஆடுதுறை, அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூர், பாபநாசம், பேராவூரணி, பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், திருவையாறு; திருவிடைமருதூர், வேப்பத்தூர், திருபுவனம் ஆகிய 20 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
750 வாக்குச்சாவடிகள்
இதற்காக 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 905 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான உபரணங்களும் தனித்தனியாக பைகளில் அடைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 56 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்துச்செல்வதற்காக 56 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் நேற்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து எந்தந்த பகுதிக்கு, எந்தெந்த வாகனம் செல்ல வேண்டும் என பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
இந்த வாகனங்கள் தஞ்சையில் இருந்து தேர்தல் நடைபெறும் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு சென்று அங்கிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்கிறது. இதையடுத்து இந்த வாகனங்கள் தஞ்சையில் இருந்து நேற்று அந்தந்த அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை வாகனங்களில் எடுத்துச்செல்வதற்காக போலீசாரும் உடன் செல்ல உள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்கும் வரை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர். இதற்காக ஒவ்வொரு வாகனங்களிலும் பாதுகாப்புக்காக செல்லும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்களும் பிரித்து அனுப்பப்பட்டனர்.
2 ஆயிரம் போலீசார்
மேலும் தேர்தல் நடைபெறும் 750 வாக்குச்சாவடி மையங்களிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்