பெண் குழந்தையை ரூ.2¾ லட்சத்துக்கு விற்ற தாய் உள்பட 10 பேர் கைது
பெண் குழந்தையை ரூ.2¾ லட்சத்துக்கு விற்ற தாய் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
பெண் குழந்தையை ரூ.2¾ லட்சத்துக்கு விற்ற தாய் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண் குழந்தை
விருதுநகர் அருகே உள்ள கே.செவல்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 58). இவருடைய மகள் கலைச்செல்வி(28). இவரது கணவர் முருகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஹாசினி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
கணவர் இறந்தவுடன் கலைச்செல்வி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கலைச்செல்விக்கு மறுமணம் செய்ய வைக்க அவரது தந்தை முயற்சி மேற்கொண்டார். ஆனாலும் குழந்தை உள்ளதால் 2-வது திருமணத்திற்கு வரன் தேடுவதில் தடைகள் ஏற்பட்டன.
இந்தநிலையில் கலைச்செல்விக்கு வரன் தேடுவதற்கு ஈரோட்டில் உள்ள திருமண தகவல் மையம் நடத்தும் கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டனர். அவரிடம் கலைச்செல்விக்கு பெண் குழந்தை உள்ளது என்றும் தெரிவித்தனர். அப்போது திருமணத்திற்கு தடையாக உள்ள பெண் குழந்தையை குழந்தையில்லா தம்பதியினருக்கு விற்பனை செய்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று கூறியுள்ளனர். கலைச்செல்வியும் குழந்தையை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ரூ.2 லட்சத்து 80 ஆயிரம்
இந்தநிலையில் திருமண தகவல் மையம் நடத்தும் ஈரோடு கார்த்திக்கும், சிவகாசியை சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கும் தொழில் ரீதியாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
மாரியம்மாளின் உறவினரான மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த வடை வியாபாரி கருப்பசாமி, அவரது மனைவி பிரியா தம்பதியினருக்கு கடந்த 20 வருடங்களாக குழந்தை இல்லை என்றும், அவர்கள் குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்து வருவதும் மாரியம்மாளுக்கு தெரியவந்தது. எனவே அவர் ஈரோடு கார்த்திக் மூலமாக கலைச்செல்வியின் பெண் குழந்தையை மதுரை கருப்பசாமியிடம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார்.
இதனை தொடர்ந்து கார்த்திக், அவரது கூட்டாளிகளான ஈரோடு நந்தகுமார் மற்றும் மகேஸ்வரி என்ற உமா ஆகிய 3 பேரும் குழந்தையை விற்பதற்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பேரம் பேசி, பணத்தை பெற்றுக்கொண்டு கொடுத்துள்ளனர். ஆனால் கலைச்செல்வியிடம் ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். இதற்கு சிவகாசியை சேர்ந்த செண்பகராஜன் மற்றும் செண்பக மூர்த்தி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
தனிப்படை
கலைச்செல்வியின் பெண் குழந்தை விற்பனை குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அந்த அமைப்பினர் கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமியிடம் தெரிவித்தனர். கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமி இதுகுறித்து சூலக்கரை போலீசாரிடம் புகார் செய்தார்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, சூலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
10 பேர் கைது
அதன் பேரில் கலைச்செல்வி தனது குழந்தையை மதுரை கருப்பசாமி- பிரியா தம்பதியினருக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வி, அவரது தந்தை கருப்பசாமி மற்றும் குழந்தையை விற்பனைக்கு ஏற்பாடு செய்த ஈரோடு கார்த்திக், அவரது கூட்டாளிகளான நந்தகுமார், மகேஸ்வரி என்ற உமா (35), சிவகாசி மாரியம்மாள்(52), உடந்தையாக இருந்த சிவகாசி செண்பகராஜன்(32), செண்பகமூர்த்தி(30), பெண் குழந்தையை விலைக்கு வாங்கிய மதுரை கருப்பசாமி, பிரியா ஆகிய 10 பேரையும் சூலக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சட்டவிரோத செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு விற்பனை செய்யப்பட்ட குழந்தை ஹாசினியையும் மீட்டனர்.
கார்த்திக் தலைமையிலான இந்த கும்பலுக்கு வேறு குழந்தைகள் விற்பனை நடவடிக்கைகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.