சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை தி.மு.க. மறந்து விட்டது;பிரசாரத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு

சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது என தேர்தல் பிரசாரத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் குற்றம் சாட்டினார்.

Update: 2022-02-17 19:28 GMT
நாகர்கோவில், 
சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது என தேர்தல் பிரசாரத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் குற்றம் சாட்டினார்.
எல்.முருகன் பிரசாரம்
குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு, குளச்சல், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
மோடியின் நேரடி பிரதிநிதி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடியவர்கள். அவர்கள் எங்கள் பிரதிநிதியாக, பிரதமர் மோடியின் நேரடி பிரதிநிதியாக நின்று கோரிக்கையை நிறைவேற்றி தருவார்கள்.
அவர்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்களான அனைவருக்கும் வீடு என்ற திட்டம், ரூ.5 லட்சத்தில் மருத்துவ காப்பீடு திட்டம், ஜல்ஜீவன் எனும் சுத்தமான குடிநீர் திட்டம் உள்ளிட்டவைகளை எளிய முறையில் பெற்றுத்தர முடியும். கொல்லங்கோடு நகராட்சி மீனவ மக்களை கொண்டுள்ள நகராட்சியாகும். நமது மோடி தலைமையிலான மத்திய அரசு மீனவ மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையான மீனவர்களுக்கு தனி அமைச்சகம் என்பதை உருவாக்கியுள்ளது. அதன்மூலம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.
தி.மு.க. போலி வாக்குறுதி
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போலி வாக்குறுதியை அளித்து ஆட்சியை கைப்பற்றினர். அப்போது அறிவித்த வாக்குறுதியை தி.மு.க. மறந்து விட்டது. பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் எங்கே?. ஊழலற்ற நிர்வாகம் அமைய உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் தாமரை பூ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் தர்மராஜ், துணை தலைவர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சிவகுமார், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் ரெஜின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்