தேர்தல் பணியின் போது செல்போனை தவிர்க்க வேண்டும்; டி.ஐ.ஜி. அறிவுரை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அறுவுரை வழங்கினார்.
ஜோலார்பேட்டை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அறுவுரை வழங்கினார்.
ஆலோனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 3 பேரூராட்சியில் நாளை (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் 1,250 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக யார் யார் எந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிகள் ஒதுக்கீடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், பணியின்போது தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
செல்போனை தவிர்க்க வேண்டும்
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராவ் வரவேற்றார்.
வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கலந்துகொண்டு நகர்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலுமின்றி சகஜமாக அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதன் பிறகு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் அன்று ஒரு நாள் மட்டும் உறவினர்களை தவிர்த்து உண்மையாக பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும் செல்போன் பயன்படுத்துவது, மற்றவர்களுடன் நின்று பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தாயாக இருப்பேன்
மேலும் பள்ளிப்பருவத்தில் படிக்கும் போது ஒரு சிலர் இதுபோன்ற பதவிக்கு வந்து நல்லது செய்வேன் என பேசுவதை பார்ப்போம். அதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.
இதை உணர்ந்து நமது குடும்பத்தையும், நம்மையும் பாதுகாத்துக் கொண்டு நமது சமுதாயத்தையும் பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் நான் ஒரு தாயாக இருப்பேன்.
எனவே அனைவரும் புதிதாக பணியில் சேர்ந்தபோது இருந்த புத்துணர்வோடு பணியின் போது சிறப்பாக பணியாற்ற வேண்டும். தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் அனைவரும் பாதுகாப்பு பணியில் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், போக்குவரத்து துறை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.