திருச்சி-காரைக்குடி மின்சார ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும்-ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் பேட்டி
திருச்சி-காரைக்குடி மின்சார ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் ராய் கூறினார்.;
புதுக்கோட்டை,
மின்சார ரெயில் பாதை
திருச்சி- காரைக்குடி வழித்தடத்தில் 89 கிலோ மீட்டருக்கு மின்சார ரெயில் பாதை மாற்றும் பணி ரூ.90 கோடியில் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. இந்த வழித்தடத்தில் மின் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதனைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் ராய் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சியிலிருந்து காலையில் புறப்பட்ட அவர் குமாரமங்கலம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தார். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த ரெயில்வே அதிகாரிகள் மின் பாதை அமைக்கும் பணி எவ்வாறு நடைபெற்றுள்ளது. அது முறையாக நடைபெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு தெரிவித்தனர்.
இந்த ஆய்வில் முதன்மை மின்சார பொறியாளர் ராஜமுருகன், மின்மயமாக்கல் திட்ட இயக்குனர் டிகே, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்
சோதனை ஓட்டம்
இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் ராய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி- காரைக்குடி இடையே மின் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனை தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் எவ்விதமான குறைகளும் கண்டறியப்படவில்லை. பணிகள் நன்றாக நடந்துள்ளது. இன்று (நேற்று) மாலை சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் திருச்சி-காரைக்குடி ரெயில் பாதையில் ரெயில்கள் ஓடத்தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். அதை தொடர்ந்து காரைக்குடியில் இருந்து புறப்பட்ட மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் மாலை 4.45 மணிக்கு புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை கடந்து திருச்சிக்கு சென்றது.