புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
திறந்தவெளி சாக்கடையால் நோய் பரவும் அபாயம்
திருச்சி மாநகராட்சி 51-வது வார்டு மீன்கார தெருவில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. சாக்கடை கால்வாயை மூடி தருமாறு பல முறை மாநகராட்சிக்கு தெரிவித்தும் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. சாக்கடையிலிருந்து துர்நாற்றம் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயில் மூடி அமைத்து நோய் அபாயத்தை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.
திருச்சி மாவட்டம், வரகனேரி பெரியார் நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் குப்பைகள் நிறைந்து கழிவுநீர் செல்வதற்கு முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திக், வரகனேரி, திருச்சி.
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து உறையூர் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து செல்லும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.
வீதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி மாநகராட்சியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மாநகரில் குப்பை தொட்டிகளை அகற்றி குப்பை தொட்டிகள் இல்லாத மாநகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் சரிவர வராததால் குப்பை தொட்டிகள் இருந்த இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் அதிகளவு கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. குப்பைத் தொட்டிகள் இருந்திருந்தால் குப்பைகள் சாலையில் கொட்டப்படாமல் இருந்திருக்கும். குப்பைகளை அகற்றாமல் அவ்வப்போது சிலர் தீ வைத்து எரிப்பதால் வெளியாகும் புகைமூட்டம் அப்பகுதி மக்களை பாதிக்கிறது. மேலும் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை சாலையோரம் குவித்து வைக்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.